அ - ஔ
அன்பான அகிலம் வேண்டும் - அதில்
அதர்மம் என்றொன்று இல்லாமை வேண்டும்
ஆத்திரம் இல்லா மனநிலை வேண்டும் - நம்
அறிவின் கண்கள் திறந்திட வேண்டும்
இன்பம் துய்க்கும் ஆசை வேண்டும்
அறநிலை மீறா மனநிலை வேண்டும்
ஈகை செய்யும் இயல்பு வேண்டும்
நன்றி மறவா உள்ளம் வேண்டும்
உலகை ஆளும் திடமது வேண்டும் - பிறர்
உணர்வை மதிக்கும் தன்மை வேண்டும்
ஊரும் உலகும் உன் பெயர் சொல்ல வேண்டும்
உன் மனதிற்குள் நீ அடங்கிட வேண்டும்
எதிலும் வேகம் உனக்குள் வேண்டும்
விவேகம் அதிலும் உன் துணைவர வேண்டும்
ஏற்றம் காணும் விழிப்பு வேண்டும்
இறங்கும் பொழுதும் நடுநிலை வேண்டும்
ஐயம் கொண்ட பார்வை வேண்டும்
உண்மை அறியும் அறிவும் வேண்டும்
ஒன்னார் உறவை அறுத்திட வேண்டும்
நம் மனநிலை உணர்த்தும் பக்குவம் வேண்டும்
ஓராயிரம் நூல்களை படித்திட வேண்டும்
வேண்டிய பகுத்திடும் திண்மை வேண்டும்
ஔவை சொல்படி வாழ்ந்திட வேண்டும்
பல வெற்றிகள் பெற்று வளர்ந்திட வேண்டும்
Comments
Post a Comment