Posts

Showing posts from April, 2009

சுகம்

இரவானால் நிலவு வரும் நிலவோடவள் நினைவு வரும் நினைவோடு மனதில் கனவு வரும் கனவில் அவளது முகமும் வரும் முகத்திலந்த நிலவே தெரியும் - அதில் மயங்கிய கண்கள் உறக்கம் கொள்ளும்

என் கனவு

என் தாத்தன் பாரதி கண்ட வண்ணம் காணி நிலமும் வேண்டாம் அங்கு பத்து மரமும் வேண்டாம் குடிசையும் வேண்டாம் - மாட கோபுரமும் வேண்டாம் சோறின்றி தவிப்போர்க்கு சோறிடும் நிலை வேண்டும் அறிவின்றி இருப்போரை நல்வழி செய்யும் நிலை வேண்டும் துரு பிடித்த மனிதத்தை புதுபிக்கும் வல்லமை வேண்டும்

என்ன செய்ய?

சுயநலம் கொண்ட அரசியலார் அடிமைகளாக அதிகாரிகள்! தங்களுக்கே பாதுகாப்பு கோரும் காவலர்கள்! எதற்கும் சம்மந்தமின்றி ஆராய்ச்சியில் அறிவியலார்! வாரிசுகள் மட்டுமே ஆட்சி செய்யும் மக்களாட்சி! பணம் படைத்தோன் பலம் படைத்தோன் ஆட்டுவிக்கும் ஜனநாயகம்! சாதி நூறு, சங்கம் நூறு மதம் நூறு, மாறுபாடு நூறு - இது வேற்றுமையில் ஒற்றுமை! எதற்கு வேண்டும் சட்டம் எப்படி வேண்டும் சட்டம் தெரியாத சட்டவியலார்! செத்துப் போன உடல்களாக சட்டங்கள் பல நூறு! எது சரி, எது தவறு சமுதாயத்தில் நம் நிலை என்ன? எதுவும் தெரியாத மக்கள்! பஞ்சத்தில் பாதி பேர் செத்து போவார் ஒருபக்கம் அரைகுறை நடனமாடி மேடையிலே கொண்டாட்டம் மறுபக்கம்! கண்டும் காணாததுமாய் காரணகர்த்தாக்கள் வேறுபக்கம்! இத்துணையும் பார்த்து நாம் ஒதுங்கி வாழ கத்துக்கணும் "ஊரோடு ஒத்துப்போ" சொன்னவர் என் மூத்தவர்; அனுபவசாலிகளாம்! மாற்றம் செய்ய நினைச்சாக்க நாம் மாறி போக வழியுண்டு - இல்லை மண்ணில் போக வாய்ப்புண்டு! தாயே மனிதம் காணவில்லை நான் என்ன செய்ய?

இயற்கை

சுட்டெறிக்கும் செங்கதிரோன் இருளகற்றி ஒளியெழுப்ப அவனுடைய அடிமைகளாய் சேவல்களும் கொக்கரிக்க சில்லென்ற நீர்ப்பரப்பில் நிற்கின்ற தாமரையும் சுள்ளென்று வெயில் பட்டு முகம் மலர்ந்து சிரித்து நிற்க மறுநிமிடம் பறவையெல்லாம் இறைதேடி பறக்கையிலே அவை எழுப்பும் ஒலியலைகள் இப்பூவுலகை அதிரவைக்க ஓடையிலே நீரலையும் ஜலதரங்கம் இசைத்திருக்க தென்றல் மெல்ல தீண்ட அதில் மரக்கிளைகள் மகிழ்ந்திருக்க மெல்ல மெல்ல சூரியனும் நடுவானம் வந்து நிற்க இவற்றையெல்லாம் பார்த்து நானும் மனம் மகிழ்ந்து நின்றிருக்க கணப் பொழுதில் சூழ்நிலையில் வந்த ஒரு மாற்றமிது நீல வர்ண வான மங்கை கருமை நிற ஆடை கட்ட பச்சை வர்ண மேடையிலே நின்ற குயில் கவிதை பாட பூமியிலே வீழ்ந்து அந்த மழைத்துளிகள் ஜதிகள் போட தவளை எல்லாம் தம் குரலில் பக்க நாதம் சேர்ந்து போட அங்கு வந்த வண்ண மயில் நடனமொன்றை ஆடிகாட்ட இடையிடையே இடியினோசை மிருதங்கம் வாசித்திருக்க வானில் வந்த மின்னல் வண்ண

பிரிவு

மண்ணில் வந்து பிறக்கையிலே தன் தாயின் கருவை பிரிந்தவனே சுடுகாடு சென்று சேரும் வரை பிரிவை என்றும் வளர்ப்பவனே பிரிவு என்ற எண்ணத்தினை உன் மனதில் இருந்து பிரித்து விடு உலகம் உய்ய வழிவகுத்து மனித மனதில் பிரியா பிறப்பு எடு

பெரியவை

வயதால் பெரியவங்க சொன்னா கேட்கனுமா? இல்லை,இல்லை வாய்மையில் பெரியவங்க சொன்னா கேளு பணத்துல பெரியவங்க சொன்னா கேட்கனுமா? இல்லை,இல்லை பண்புல பெரியவங்க சொன்னா கேளு பலத்துல பெரியவங்க சொன்னா கேட்கனுமா? இல்லை,இல்லை பாசத்துல பெரியவங்க சொன்னா கேளு வேகம் உள்ளவங்க சொன்னா கேட்கனுமா? இல்லை,இல்லை விவேகம் உள்ளவங்க சொன்னா கேளு உறவில் பெரியவங்க சொன்னா கேட்கனுமா? இல்லை,இல்லை உண்மையில் பெரியவங்க சொன்னா கேளு சாதியில பெரியவங்க சொன்னா கேட்கனுமா? இல்லை,இல்லை சத்தியத்தில பெரியவங்க சொன்னா கேளு சாத்திரம் படித்தவன் சொன்னா கேட்கனுமா? இல்லை,இல்லை சலனம் இல்லாதவன் சொன்னா கேளு மதத்தில பெரியவங்க சொன்னா கேட்கனுமா? இல்லை,இல்லை மனத்துல பெரியவங்க சொன்னா கேளு அனுபவத்தில பெரியவங்க சொன்னா கேட்கனுமா? இல்லை,இல்லை ஆன்மா அறிந்தவர்கள் சொன்னா கேளு ஞாலத்தில் பெரியவங்க சொன்னா கேட்கனுமா? இல்லை,இல்லை ஞானத்தில் பெரியவங்க சொன்னா கேளு அறிவில் பெரியவங்க சொன்னா கேட்கனுமா? இல்லை,இல்லை அன்பில் பெரியவங்க சொன்னா கேளு

நமக்கெதற்கு

ஆக்குவிக்கும் திறன் ஆயிரம் கோடி கொண்டிருந்தும் ஆழமாய் பகுத்தறியா அறிவாளி நமக்கெதற்கு உயிர்துறந்து உருவான உறவென்று இருந்தாலும் பிற உறவை மதியாத உறவொன்று நமக்கெதற்கு பல ஆண்டு செலவழித்து பயில்கின்ற மானிடனின் பண்பொன்றை மாற்றாத கல்வியது நமக்கெதற்கு பல பெரியர் ஆராய்ந்து தோற்றுவித்திருந்தாலும் மனிதனை மனிதனாக்கா மதமொன்று நமக்கெதற்கு பல குடும்பம் வாழ்வதற்கு வழி வகுத்திருந்தாலும் சீரழிவை ஏற்படுத்தும் தொழில் வகைகள் நமக்கெதற்கு தன் நிலைமை அறியாமல் பிறர் தரமும் தெறியாமல் தேவையற்ற வார்த்தைகளைப் பேசுமினம் நமக்கெதற்கு கண்காணா தொன்றிற்காய் காரியங்கள் பல செய்து கடமையதை மறக்கின்ற மனித இனம் நமக்கெதற்கு

அ - ஔ

அ ன்பான அகிலம் வேண்டும் - அதில் அதர்மம் என்றொன்று இல்லாமை வேண்டும் ஆ த்திரம் இல்லா மனநிலை வேண்டும் - நம் அறிவின் கண்கள் திறந்திட வேண்டும் இ ன்பம் துய்க்கும் ஆசை வேண்டும் அறநிலை மீறா மனநிலை வேண்டும் ஈ கை செய்யும் இயல்பு வேண்டும் நன்றி மறவா உள்ளம் வேண்டும் உ லகை ஆளும் திடமது வேண்டும் - பிறர் உணர்வை மதிக்கும் தன்மை வேண்டும் ஊ ரும் உலகும் உன் பெயர் சொல்ல வேண்டும் உன் மனதிற்குள் நீ அடங்கிட வேண்டும் எ திலும் வேகம் உனக்குள் வேண்டும் விவேகம் அதிலும் உன் துணைவர வேண்டும் ஏ ற்றம் காணும் விழிப்பு வேண்டும் இறங்கும் பொழுதும் நடுநிலை வேண்டும் ஐ யம் கொண்ட பார்வை வேண்டும் உண்மை அறியும் அறிவும் வேண்டும் ஒ ன்னார் உறவை அறுத்திட வேண்டும் நம் மனநிலை உணர்த்தும் பக்குவம் வேண்டும் ஓ ராயிரம் நூல்களை படித்திட வேண்டும் வேண்டிய பகுத்திடும் திண்மை வேண்டும் ஔ வை சொல்படி வாழ்ந்திட வேண்டும் பல வெற்றிகள் பெற்று வளர்ந்திட வேண்டும்

மௌனம்

குயிலே உன்தன் மௌனத்தால் என் மயிலின் நடனம் நின்றுபோனது மழையே உன்தன் மௌனத்தால் என் பூமியெங்கும் வரண்டு போனது சூரியனே உன் மௌனத்தால் என் உலகமெல்லாம் இருண்டு போனது வெண்ணிலவே உன் மௌனத்தால் என் கண்களிரண்டும் தூக்கம் மறந்தது சிந்தனையே உன் மௌனத்தால் என் மனதிலெங்கும் துக்கம் படர்ந்தது வண்டினமே உன் மௌனத்தால் பூக்கள் எல்லாம் கருகிப் போனது பயிரினமே உன் மௌனத்தால் என் பசியே இன்று ஈசனானது பொறுமையே உன் மௌனத்தால் என் ஆயுள் காலம் சிறுத்து போனது பசுமையே உன் மௌனத்தால் மகிழ்ச்சி என்றும் அழிந்து போனது சத்தியமே உன் மௌனத்தால் தர்மம் எங்கும் அழிந்து போனது

எய்ட்ஸ்

ஒருவனுக்கு ஒருத்தி என்று ஓதி வளர்த்த நம் நாட்டில் ஓரினச் சேர்க்கை அவலங்கள் அதனால் எய்ட்ஸின் பயங்கரங்கள் காம உணர்வை அடக்காமல் கட்டுக்குள்ளே அடங்காமல் ஊரில் உள்ள பலருடனே ஒருவர் செய்யும் களியாட்டம் சிந்தனை அதையே சிதறடிக்கும் கண்காணா கிருமிகளால் உடல் அழிக்கும் சரியாய் வழிகள் வகுக்காமல் முறையாய் வாழ்க்கை வாழாமல் உணர்ச்சியின் வழியில் சென்றாலே இயற்கை போடும் தடைகல்லு எய்ட்ஸென்றும் அழிவின் படிக்கல்லு எந்தன் நாட்டுக் காளைகளே பூவையொத்த பூவைகளே கட்டுப்பாடாய் வாழுங்கள் காமம் அதையே வெல்லுங்கள் கால தேவன் கணக்கேட்டில் சரித்திரம் படைத்து வாழுங்கள் நாட்டின் பெருமை காத்திடுங்கள் புதிய வரலாறு படைத்திடுங்கள்

மறந்தவை!

சாதி என்பார் மதம் என்பார் மனிதம் என்று ஒன்றுண்டு அதை ஏனோ மறந்தாரே! பெயர் என்பார் புகழ் என்பார் மனம் என்று ஒன்றுண்டு அதை ஏனோ மறந்தாரே! சட்டம் என்பார் கடமை என்பார் கருணை என்று ஒன்றுண்டு அதை ஏனோ மறந்தாரே! விதி என்பார் வினை என்பார் உண்மை என்று ஒன்றுண்டு அதை ஏனோ மறந்தாரே! உடல் என்பார் உயிர் என்பார் வாழ்க்கை என்று ஒன்றுண்டு அதை ஏனோ மறந்தாரே!

வெற்றுகளே

நல்நட்பில்லா வாழ்வும் நல்குணமில்லா பெண்ணும் நல்நினைவில்லா மனமும் நல்உணர்வில்லா உடலும் நல்மனையில்லா ஆணும் முற்றுபெறா வெற்றுகளே

முதல் வணக்கம்

வள்ளுவனின் குறளோவியம் ஔவையின் அருளோவியம் கம்பனின் கதையோவியம் பாரதியின் சொல்லோவியம் வைரமுத்துவி்ன் கவியோவியம் எல்லாம் கண்ட தமிழுக்கு இக் குழந்தைக் கவிஞனின் வலையோவியம் சமர்ப்பணம்